ADVERTISEMENT

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்; பரபரப்பைக் கிளப்பும் ஆளுநர் மாளிகை சம்பவம்

08:34 PM Oct 26, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், நேற்று ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.

நேற்று நிகழ்ந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்தது.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாகப் பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசக்கார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது' எனக் காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு வைத்திருந்தது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரைத் தமிழக டிஜிபி மறுத்துள்ளார். அதில், 'ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனக் கூறப்படுவது உண்மைக்கு மாறானது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும். காவலர்கள் விழிப்புடன் இருந்ததால் பெட்ரோல் குண்டு வீசியவர் உடனே கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரலில் மயிலாடுதுறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது எனக் கூறியதும் உண்மைக்கு மாறானது. ஆளுநருக்கும் அவரது மாளிகைக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் தெரிவித்த புகார் முற்றிலும் உண்மைக்கு மாறானது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வரை சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்தவர் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் என்ற தகவல் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்திய கருக்கா வினோத்தை பாஜக வழக்கறிஞரே ஜாமீனில் எடுத்தது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT