ADVERTISEMENT

“பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது” - ஆர்.எஸ். பாரதி காட்டம்

11:56 PM Mar 06, 2024 | prabukumar@nak…

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சிறுமி ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் நேற்று (05.03.2024) கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

இது குறித்து துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரைப் பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டைக் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தது. முன்னதாக சிறுமியின் பெற்றோர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம், குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை அடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில், உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் - பா.ஜ.க.வின் துணை நிலை ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தின் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற - இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண் குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பா.ஜ.க. கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சுக்கு முந்நூறு முறை பா.ஜ.க.வில் பெண்ணுரிமை கூவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம் - அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.

2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா...? என கேட்கிறேன். அத்துடன் உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015இல் பிரதமர் மோடி அவர்கள் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும் - பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜ.க. ஆட்சிக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT