தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் திருவிழா துவங்கி ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைவதால் பலரும் ஆர்வமாக வேட்புமனுத்தாக்கல் செய்துவருகின்றனர்.இந்நிலையில், திருச்சி மாநகர பகுதிக்கு உட்பட்ட 65 வார்டுகளுக்கு 4 கோட்டங்கள் பிரிக்கப்பட்டு, மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர்கள் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.திருச்சி 2 வது வார்டு பாஜக வேட்பாளர்கள் கோவிந்த், 3வது வேட்பாளர் லீமா ரோஸ் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு இன்று மனுத்தாக்கல் செய்ய வந்தனர். ராஜகோபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திற்கு வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வேட்பாளருடன் இருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்யும் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த பாஜகவினர், நேற்று திமுகவினர் மனுத்தாக்கல் செய்ய வந்தபோது ஏராளமானோர் சென்றனரே. அவர்களுக்கு விதி பொருந்தாதா என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அங்கு பணியில் இருந்த காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான காவலர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் விதிமுறைகளின் படி வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோரி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.