
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் கட்சி அலுவலகம் அருகில், குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் வந்திருந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது,
“குடியரசு சட்டம் நம்மை வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறி வருகிறார். ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால் கரோனா நோய்த்தொற்று ஏற்படாதா? ஆனால் கரோனா தொற்றைக் காரணம் காட்டி, கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களைத் தெரிவிக்காமல், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளார். அதன்பிறகே, சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கும் எனக்கும் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் முதல்வர் ஆன பிறகு, மக்களின் குறைகளை 100 நாள்களில் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்க்கடவுள் முருகன் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவர். அவர் பொதுவானவர். அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம்.
பருவமழை, புயல் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிவாரணம் இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.
இப்போதைய நிலையில், 3வது அணி என்பது சாத்தியமில்லை. திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதாவின் மரண வழக்கை விசாரித்து வரும் ஒரு நபர் விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது.” இவ்வாறு முத்தரசன் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)