/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_206.jpg)
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் அங்கமுத்து(60). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று ஆத்தூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த புகார் மனுவில், ‘நான் நேற்று முன்தினம் மதியம் திரையரங்கில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகி அருள் பிரகாஷ் அலைப்பேசி மூலம் என்னை அழைத்தார். அதில் அவர், திரையரங்கு மற்றும் அதன் சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர் தன்னை பவர் ஏஜண்டாக நியமித்துள்ளார். அதனால், இனி திரையரங்கு மற்றும் கடைகளை அவர் நிர்வகிக்கப் போவதாகவும் கூறினார். இதற்கு உடன்படியாவிட்டால், என்னைக்கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் என்னை நேரில் சந்தித்து அவர் வைத்திருந்த ஆவணங்களைக் காட்டி மிரட்டினார். அதனால், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அவர் அளித்த அந்த புகார் மனுவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து கூட்டுச் சதி செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவுத் தலைவர் அருள் பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த நரேஷ் குமார் மற்றும் அவருடைய மனைவி கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரை காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் அருள் பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow Us