
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது பக்கத்து வீட்டில் சபிமோள் வசித்து வருகிறார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக இடப் பிரச்சனையால் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து விடலாம் என்று சபிமோள் எண்ணியுள்ளார். அதனால் சபிமோள், மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் மற்றும் பா.ஜ.க முன்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோரை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துக் கூறி பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
அதன்படி, ஊராட்சித் தலைவர் சசிகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் ஆகியோர் சம்பவ இடமான சபிமோள் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று அவர்கள் பேச்சு வார்த்தை நடத்திய போது, சரோஜா மற்றும் சபிமோள் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிப்போக இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது பேச்சு வார்த்தை நடத்த சென்ற ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் கோபமடைந்து, தனது காலால் சரோஜா வயிற்றில் எட்டு உதைத்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரோஜா, காயமடைந்தார். இதனால், அங்கு சில நேரம் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சசிகுமார் மற்றும் சாவர்க்கர் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டனர். சரோஜாவின் உறவினர்கள் காயமடைந்த சரோஜாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, சரோஜா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், சபிமோள், சசிகுமார் மற்றும் சாவர்க்கர் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், சபிமோள் தரப்பிலும் சரோஜா தன்னை தாக்கிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் மோதி கொண்டதையும், சாவர்க்கர் சரோஜாவை எட்டி உதைக்கும் காட்சியையும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.