ADVERTISEMENT

பறக்கும் படை அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டிய பா.ஜ.க. வேட்பாளர்!

02:26 PM Apr 05, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

அதே சமயம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் குறிச்சி பிரிவு சாலையான ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்துள்ளார். அவர் வந்த காரை பறக்கும் படையினர் சோதனை செய்வதற்காக நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் காரை சாலையின் ஓரமாக நிறுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே நிறுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல் பறக்கும் படையினரின் சோதனைக்கு ஒத்துழைக்க பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மறுத்துள்ளார். மேலும் கண்காணிப்பு அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை நோக்கி மிரட்டும் தொணியில், “வழக்குபோட்டு வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜ கோபால் சுங்கரா தெரிவிக்கையில், “இது தொடர்பான வீடியோவை நாங்கள் விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT