மயானத்தில் நடந்த போராட்டம்; விவசாய சங்கத்தினருடன் பாஜகவினர் வாக்குவாதம்!

BJP argue with farmers union in Trichy

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புதிதாக அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும், காவிரி ஆற்றில் காவிரி மேலாண்மை ஆணைய பங்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாயிகளின் விலைப் பொருள்களுக்கு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி ஓயாமரி மயான தகன மேடையில் விவசாயிகள், வியாழக்கிழமை சடலம்போல படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அருகில் அமர்ந்த விவசாய சங்கத்தினர் யாகம் செய்வதுபோலவும் போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை(30.5.2024) தேய்பிறை அஷ்டமியையொட்டி அருகில் உள்ள கால பைரவர் மற்றும் அரிச்சந்திரன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்துகொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். விவசாயிகள் யாகம் செய்து போராடும் தகவலறிந்த பக்தர்கள் இது குறித்து பாஜக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து நிகழ்விடம் வந்த பாஜகவினர், இந்துக்களின் மத சடங்குகளை இழிவுபடுத்தும் விதமான போராட்டத்தை கைவிட வேண்டும் என்றனர். இதையடுத்து விவசாய சங்கத்தினர் மற்றும் பாஜக வினருக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. எனவே போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தைக் கைவிடவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 8 பேரை போலீசார் அழைத்துச்சென்று தனியிடத்தில் வைத்திருந்து பின்னர் மாலை விடுவித்தனர். இது தொடர்பாக கோட்டை போலீசார் விவசாயசங்கத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்

Farmers trichy
இதையும் படியுங்கள்
Subscribe