
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலையத்தில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியிலிருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் ஆடுகளைத் திருட வந்த கும்பல் எனத் தெரிந்துகொண்ட பூமிநாதன் அவர்களைப் பிடிக்க முயன்ற பொழுது அந்த கும்பல் எஸ்.ஐ பூமிநாதனை வெட்டிக்கொன்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக சிறப்பு சட்டம் விரைவாகக் கொண்டு வரப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.