Skip to main content

''நான்காம் கட்ட தலைவர்கள் பற்றியும் கூட பாஜக சிந்திக்கிறது''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

"BJP is also thinking about fourth phase leaders" - Vanathi Srinivasan interview

 

திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''யார் மக்களுக்கான பணிகளை செய்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம். குறைகளை கேட்டு சொல்லுங்கள், அதை சரி செய்ய பாருங்கள். தேர்தலில் யார் எங்கே நிற்பார்கள் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தெரியும். யாருக்கு ஆதரவளிப்பது என்று மக்களுக்கு தெரியும். இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமல்ல மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட தலைவர்கள் பற்றியும் கூட பாஜக சிந்திக்கிறது. அதுதான் மற்ற கட்சிகளுக்கும் பாஜகவிற்கும் இருக்கின்ற வித்தியாசம். ஒரு மாவட்டமாக இருக்கட்டும், ஒரு மாநிலமாக இருக்கட்டும், அடுத்து வரக்கூடிய 10 வருடம் யார், 20 வருடம் யார் என்பது குறித்த தெளிவான திட்டமிடல் எங்களிடம் இருக்கிறது.

 

அடுத்தடுத்து ஒரே குடும்பத்தை சாராமல் ஒரு தனி நபரை சாராமல் இந்த கட்சியும் இயக்கமும் இவ்வளவு வெற்றி பெற்றுள்ளது. உள்ளூர் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், அடுத்த தலைமுறைக்கான தலைவர்கள் உருவாக்கின்ற பணியை நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு குற்றவாளியையும் அந்த சமூகம் பாதுகாக்கும் என்றால் அந்த குற்றத்திற்கு விடிவே கிடையாது. தேச விரோத செயல்கள், மனித குலத்திற்கு எதிரான செயல்களை செய்பவர்களை தயவு செய்து மதத்தினுடைய பார்வை கொண்டு பார்க்க வேண்டாம். இதைத்தான் நான் சிறுபான்மை மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் என்றால் அவர்களை குற்றவாளிகளாக பாருங்கள். தயவு செய்து அவர்களுக்கு மத சாயம் கொடுத்து சமூகத்தின் அமைதியை குழைப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. கோவையில் கூட சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று நீங்கள் சொல்லக்கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது நடைபெற்றது. அதற்கு பின்பாக கோவையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களை ஒரு விதத்தில் பாராட்டுகிறேன். உடனடியாக இந்த மாதிரியான நபர்களுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தீர்மானித்தார்கள். இதுபோன்று சமுதாய மக்கள் யார் குற்றம் செய்கிறார்களோ, யார் தீவிரவாத செயல்கள் ஈடுபடுகிறார்களோ அவர்களை நீங்களும் முற்றிலுமாக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விளவங்கோடு தொகுதி காலியானதாகத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
A letter to the Election Commission stating that Vilavankode constituency is vacant

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி கடந்த 24 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டப் பேரவை முதன்மைச் செயலருக்கு, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி சட்டப்பேரவை தலைவருக்கும் சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார் விஜயதாரணி. இதனையடுத்து விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story

காங்கிரஸ் எம்.பி. பா.ஜ.கவில் இணைந்தார்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Congress MP Sudden withdrawal from the party and joins bjp in jharkhand

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும், கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அசோக் சவான் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அதேபோல், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறி வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கட்சியிலிருந்து திடீரென்று விலகியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா கோடா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக சிங்பூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், எம்.பி. கீதா கோடா காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீரென்று விலகி, பா.ஜ.கவில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணி குறித்த அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏவாக இருந்த கீதா கோடாவின் கணவர் மதுகோடா, கடந்த 2006 ஆம் ஆண்டு, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.