Bill tabled regarding the appointment of a VC for the University of Physical Education

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. எனவே கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளான 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.

Advertisment

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் சட்டத்திருத்த மசோதாவை இன்று (29.04.2025) தாக்கல் செய்தார். அதன்படி பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளித்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம் மற்ற மாநிலங்களைப் போலப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவில் நிதித்துறை செயலாளரையும் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.