'Bill completed'-Tamil Government Notification

சட்டப்பேரவையில் கடந்த 10/01/2025 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருந்தார். அண்ணா பல்கலையில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அந்த திருத்த மசோதாவில் பாலியல் வழக்குகளில் சிக்கினால் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 'பெண்களை பின் தொடர்ந்தால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பாலியல் குற்றங்களுக்கு பிணையில் விடுவிக்காத படி சிறை; குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை; பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை; பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வழி வகை செய்தல்; மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை; ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை' என பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தது. 10/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதா 11/01/2025 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

Advertisment

தொடர்ந்து தமிழக அரசின் இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த சட்டம் கடந்த 25ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.