Advertisment

மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து! பைக்கில் வந்த இருவர் பலி! 

Bike Bus accident near cuddalore district two passed away

கடலூர் மாவட்டம், கடலூரில் இருந்து நேற்று இரவு ஒரு தனியார் பேருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில் குள்ளஞ்சாவடி அருகே பெரிய காட்டுசாகை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த பைக் மீது பேருந்து மோதியது. இதில் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பேருந்து துணை மின் நிலையம் அருகே இருந்த சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றது.

Advertisment

அப்போது மின் பொறி பட்டு பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தின் டயர்கள் வெடித்தன. இதனால் பயணிகள் அனைவரும் அலறியடித்து பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். அவசரமாக பேருந்தில் இருந்து குதித்த முதியவர் ஒருவர் காயமடைந்தார்.

Advertisment

கடலூர் - சேலம் நெடுஞ்சாலையோரம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம் முன்பு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் பெரும் கூட்டமாக கூடினர். இதுகுறித்த தகவலின் பேரில் கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் 30 நிமிடத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த கடலூர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சபரிநாதன்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் செந்தில்குமார்(38) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் உறவினர்கள்.

இந்த விபத்தால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் பேருந்து மோதி தீப்பிடித்ததால் வழுதலம்பட்டு, அண்ணவல்லி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட குள்ளஞ்சாவடி சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe