Bike and Bus accident in puthukottai two passes away

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் - புதுக்கோட்டை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்துகொண்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகரித்து விபத்துகளும் அதிகரித்துள்ளன.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) இரவு திருமயம் பாம்பாற்றுப் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எதிரே காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து மீது மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியதால் பேருந்தும் முழுமையாக தீப்பற்றி எரிந்து நாசமாகிவிட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisment

விபத்து சத்தம் கேட்டதும் பயணிகள் வேகமாக இறங்கிவிட்டதால் மேலும் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குப் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பஸ் வேகமாக எரிந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் பலியானவர்கள் யார் என்ற விபரம் தெரியாத நிலையில், இன்று (13.12.2021) அவர்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை சின்னையா சத்திரம் ராஜாங்கம் மகன் முருகானந்தம் (எ) செல்வம் (22), மற்றும் காரைக்குடி காட்டுத்தலைவாசல் கலையரசன் மகன் மணிகண்டன் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் பலியானது தெரியவந்தது.