
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு அங்குள்ள வேலாயுதசாமி கோயில் மலை அடிவாரத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர், கோவையைச் சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருக்கு செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திக்கொள்ள குத்தகை விட்டுள்ளார்.
இந்த தெழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். கணிசமான அளவில் வடமாநில தொழிலாளர்களும் உள்ளனர். பீஹார் மாநிலம் புல்வாரியா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருதீன் (31) என்பவர் இங்கு வேலை செய்துவந்தார். இவர், தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த பலரை இந்த தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துள்ளார். நஸ்ருதீன், தொழிற்சாலையின் அருகிலேயே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் (பிப். 2) இரவு நஸ்ருதீன் மது குடித்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை காலையில் அவருடைய அறையில் சடலமாகக் கிடந்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர் செல்வராஜூக்கும் மகுடஞ்சாவடி காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து சங்ககிரி டி.எஸ்.பி. ரமேஷ், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலம் கிடந்த இடத்தில் இருந்த தடயங்கள், விரல் ரேகை பிரிவினரால் பதிவு செய்யப்பட்டது. காவல்துறை விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன.
நஸ்ருதீன் வேலை செய்து வந்த செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில், அவருடைய மாநிலத்தைச் சேர்ந்த பலரை கமிஷன் அடிப்படையில் வேலைக்குச் சேர்த்துள்ளார். தன் மூலம் பணிக்குச் சேர்ந்த தொழிலாளர்களை அவர் அடிக்கடி கடும் வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் நஸ்ருதீனும், உடன் வேலை செய்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகுமார் ரிஷிதேவ் (34), அமித்குமார் (23) ஆகியோரும் சம்பவத்தன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஒழுங்காக வேலை செய்யும்படி மிரட்டியதோடு, தான் சொன்னபடி கேட்காவிட்டால் வேலையை விட்டு நீக்க வைத்துவிடுவேன் எனவும் மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயகுமார் ரிஷிதேவ், அமித்குமார் ஆகியோர் நஸ்ருதீனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
நஸ்ருதீன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய அவர்கள், இருவரும் ஒன்றும் நடக்காததுபோல் நஸ்ருதீனை படுக்கையில் கிடத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி, தங்களது அறைக்குச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயகுமார் ரிஷிதேவ், அமித்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
கொலையுண்ட நஸ்ருதீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்காக சில நாட்களுக்கு முன்னதாக அவருக்கு சொந்த ஊரில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.