Bihar woman passes away in kallakurichi police investigation on case

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராம எல்லைப் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தக் கட்டட பணிகளில் வேலை செய்வதற்காக ஒடிசா, பீகார் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களைக் கொண்டு கட்டட பணி செய்துவருகின்றனர்.

Advertisment

இதில் பீகார் மாநிலம், அம்ரித் பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரிஜிவ் பிரானு என்பவரது மனைவி மூர்த்தி தேவி (25) என்பவர் கட்டட பணி செய்துவந்துள்ளார். அதே பகுதியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கேசப் நாயக் (33) என்பவரும் கட்டடப் பணி செய்துவந்துள்ளார். வேலை நேரத்தின்போது மூர்த்தி தேவியிடம், கேசப்நாயக் அவ்வப்போது கிண்டல், கேலி செய்துவந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று (19.09.2021) காலை அதே கட்டடப் பகுதியில் உள்ள பாத்ரூம் பகுதியில் மூர்த்தி தேவி, துணி துவைத்துக்கொண்டிருந்தபோது கேசப் நாயக் அவரிடம் நெருங்கி, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மூர்த்தி தேவி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கேசப் நயக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூர்த்தி தேவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மூர்த்தி தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார்.

இதனை தற்செயலாகப் பார்த்த மற்றொரு கட்டடத் தொழிலாளி, அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கேசப் நாயக்கை தாக்கியுள்ளார். அவர் அந்த பாத்ரூமிலேயே உள்பக்கம் தாழ்பாள் போட்டு மறைந்துகொண்டார். சற்றுநேரத்தில் மூர்த்தி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவல் கள்ளக்குறிச்சி போலீசாருக்குத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பாத்ரூமில் பதுங்கியிருந்த கொலையாளி நாயக்கை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

போலீசார் பிடிப்பதற்கு முன் பாத்ரூமுக்குள் பதுங்கியிருந்த கேசப் நாயக், தனது உடம்பில் தனக்குத்தானே ஆயுதங்களால் காயம் ஏற்படுத்திக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, கேசப் நாயக்கை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிரிழந்த மூர்த்தி தேவியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கட்டடப் பணி மேற்பார்வையாளர் ரஞ்சித், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்டபோலீசார், கேசப் நாயக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கேசப் நாயக்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.