
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,71,239 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று(16.5.2025) வெளியாகின. அதில் 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட 4.14 % மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதற்கிடையே நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜியா குமாரி தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் எடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மாணவி ஜியோ குமாரி சென்னையை அடுத்த கவுல் பஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். ஆரம்பத்தில் தமிழில் படிப்பதற்கு சிரமப்பட்ட மாணவி, ஆசியர்களின் உதவியாலு, சக மாணவர்களின் ஊக்கத்தாலும் தமிழை நன்கு கற்றுள்ளார். இந்த நிலையில் மாணவி ஜியா குமாரி நடந்த முடிந்த பொதுத்தேர்வில் 500க்கு 467 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். அதிலும் தமிழில் 100க்கு 93 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை வேலைவாய்ப்பு மற்றும் குழந்தைகளின் கல்விக்காக பீகாரில் இருந்து குடுப்பத்துடன் சென்னை வந்ததாக தெரிவித்துள்ள மாணவி ஜியா குமாரி, தமிழ்நாட்டில் தரமான கல்வி கிடைப்பதாகவும் அரசின் திட்டம் பெரும் உதவியாக உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.