Bhuvanagiri-Kurinjipadi road cut off due to continuous rains

Advertisment

கடலூர் மாவட்டம், புவனகிரி - குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலையில் சாத்தப்பாடி கிராமத்தின் அருகே வடிகால் வாய்க்கால் பாலம் தாழ்வாக இருந்ததது. இதனை புதிய உயர்மட்ட பாலமாகக் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பாலம் கட்டுவதற்கான அடிப்படை பணிகள் கடந்த 1 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக்கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளும் கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி வாய்க்கால் கன மழையால் நிரம்பி பாலத்தின் மீது மழைநீர் செல்வதால் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைமட்ட பாலம் உடையும் நிலை ஏற்பட்டது.

இதனையறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள் கிழமை இரவில் இருந்து புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். மணல் மூட்டைகளைக் கொண்டு சாலையின் மேல் செல்லும் தண்ணீரைத்தடுத்து நிறுத்தி பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீர் விரைவில் வடிவதற்கான பணிகளைச் செய்து வருகிறார்கள். இதனால் அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் 10 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு சேத்தியாதோப்பு குறுக்குரோடு வழியாகச் செல்கிறது. தற்காலிகப் பாலத்தைச் சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் எடுக்கப்பட்டு வரப்படுகிறது.