ADVERTISEMENT

என்.எல்.சியைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ உண்ணாவிரதப் போராட்டம்

11:08 AM Jul 31, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் வளையமாதேவி, மேல் வளையமாதேவி, கத்தாழை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தி விளையும் நெற்பயிர்களை அழித்துக் கால்வாய் அமைக்கும் பணியைக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தொடங்கியது.

இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதனைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அந்த இடம் வன்முறைக் களமாக மாறியது. இதனையொட்டி அதிமுக சார்பில் சேத்தியாத்தோப்பு அருகே கூட்ரோடு பகுதியில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்டனர்.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் ஈடுபட்டு வருகிறார்கள். அனுமதி இல்லாமல் அரசு இடத்தில் உண்ணாவிரதம் கூட்டாகச் சேர்ந்து இருப்பதால், எந்நேரத்திலும் எம்எல்ஏ கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக அரசு மத்திய அரசிடம் அடிபணிந்து இருப்பதால் தைரியமாக அவர்கள் நெற்பயிர்களை அழித்துக் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவும், பாஜகவும் நெய்வேலி விவாகரத்தில் கூட்டாக உள்ளது. மேலும் நெற்பயிரை அறுத்த பிறகு அதனை அகற்ற நடவடிக்கை எடுத்து இருக்கலாம், நெற்பயிரை அழித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், போராட்டம் தொடரும் எனச் செய்தியாளர்களிடம் கூறினார்.

புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஏ. பாண்டியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT