பா.ஜ.க.வின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்து வருவதால் இரு அரசுக்கும் பிரச்சனை நீடித்து வரும் சூழலில் தற்போது நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
அவர் நடத்தி வரும் ஜன சேனா கட்சியின் 12 வது ஆண்டு விழா ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியாவுக்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேவை. சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கிறார்கள் என எனக்குப் புரியவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள், அதே நேரத்தில் நிதி ஆதாயத்திற்காகத் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள்? இந்தி சினிமாவில் இருந்து பணம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் இந்தி மொழியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன மாதிரியான லாஜிக்.
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களைத் தமிழ்நாடு வரவேற்கிறது. ஆனால் அவர்களின் மொழியை நிராகரிக்கிறது. இது நியாயமற்ற செயல். ஏன் இந்த முரண்பாடு? இந்த மனநிலை மாற வேண்டாமா?” எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாணின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் 'எக்ஸ்' வலைத்தளத்தில் திமுக எம்.பி கனிமொழி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், 'மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது' எனதெரிவித்துள்ளதோடு, பாஜக கூட்டணியில் இடம்பெறாதாமுன்பு பவன் கல்யாண் இந்தி மொழி குறித்துதெரிவித்த நிலைப்பாட்டையும், பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு பவன் கல்யாண் இந்தி மொழி குறித்து எடுத்திருக்கும் நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.