தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
அவரது உரையாவது, ''கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். ஓய்வு பெற்ற ஐ .ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்' என்ற நூலை அண்மையில் வெளியிட்டேன். தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் நாம் எத்தகைய பெருமையை அடைய வேண்டும் என்பதற்கு அடிப்படையான நூல். அதில் சிந்து பண்பாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி. வாழ்ந்த மக்கள் சங்க கால தமிழர்களின் மூதாதையர் என்பதை நிறுவி இருக்கிறார்.
தமிழகத்தின் வேர்கள் என்பவை தமிழ்நாட்டில் முடிபவை அல்ல. உலகின் பல நாடுகளுக்கும் பரவி இருந்தவை என்பதை அறிய முடிகிறது. அத்தகைய பாரம்பரியத்தின் சின்னமாக சிங்கப்பூர் தமிழர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள். சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் தமிழ் பெயர் இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நூல் வெளியாகி இருக்கிறது.
தமிழர்களாகிய நம்மை மதமோ ஜாதியோ ஒருபோதும் பிளவுபடுத்திவிட முடியாது. இப்பொழுதும் உங்கள் உழைப்பின் மூலமாக இந்த நாட்டை நீங்கள் உயர்த்தி வருகிறீர்கள். அதன் மூலமாக நீங்களும் உயர்ந்து கொண்டிருக்கிறீர்கள். கல்வியும் உழைப்பும் தான் தமிழர்களின் இந்த உயர்வுக்கு காரணம். இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நான் வருகை தந்திருக்கிறேன். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் பங்கேற்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க நான் இங்கே வந்திருக்கிறேன்'' என்றார்.