On behalf of Tamil Nadu Government Rs. 17 crore worth of relief goods

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டடத்திலுள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 06.12.2023 முதல் இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்களின் வாயிலாகப் பெறப்படும் நிவாரணப் பொருட்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதுவரை 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள். 13,08,847 பிஸ்கட் பாக்கெட்கள், 73.4 டன் பால் பவுடர்கள், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 82,400 பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகள். நைட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குவளைகள், மெழுகுவர்த்திகள். தீப்பெட்டிகள்என ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 34 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்கள், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள், குன்றத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பொருட்கள் வழங்க ஏதுவாக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண் மூலம் தோராயமாக ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு அவையும் தேவையான பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment