Skip to main content

பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை– ஆம்பூரில் பரபரப்பு!

Published on 10/05/2022 | Edited on 12/05/2022

 

 Beef banned at Biryani festival

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15  என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவை நடக்கிறது..

 

ஆம்பூர் நகரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ள 100 ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்கள். மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை நேரில் சந்தித்து மாட்டுக்கறி  பிரியாணி சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அதனையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஒரு சமுதாய மக்கள் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பவில்லை. அவர்களையும் நான் பார்க்க வேண்டும் அதனால் அதற்கு அனுமதியில்லை எனச்சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயலுக்கு பல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

தமிழ்நாட்டில் 'ஷவர்மா' தடை செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது சமூக ஊடகத்தில் பெரும் சர்ச்சையையும் அரசு மீது கடும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ள சூழ்நிலையில் அரசின் சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி பிரியாணிக்கு இடமில்லை எனச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.