
கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் கணவன், அரிவாள்மனையால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தோட்டம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சுந்தரம் (40). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்தார்.
மனைவிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், முதல் மனைவி கோபித்துக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கே நிரந்தரமாகச் சென்று விட்டார்.
இதையடுத்து சுந்தரம், தனது இரண்டாவது மனைவி லட்சுமி (30) மற்றும் அவர் மூலம் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தினமும் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டு வருவதால் சுந்தரத்துக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ஜூலை 19ம் தேதி இரவும் அவர் மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
ஆனால் மறுநாள் (ஜூலை 20) பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்தபோது, வீட்டுக்குள் லட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகரகாவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சுந்தரம்தான் அரிவாள்மனையால் லட்சுமியை கழுத்திலும், தாடையிலும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சுந்தரம் தலைமறைவானார். கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் மலை அடிவாரம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுந்தரத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''சுந்தரத்திற்கும் லட்சுமிக்கு தகராறு ஏற்பட்டால் கோபித்துக்கொண்டு லட்சுமி, பழைய பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவார். கோபம் தணிந்த பிறகு வீடு திரும்புவார்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட லட்சுமியை, சம்பவத்தன்றுதான் சுந்தரத்தின் தாயார் சமாதானம்செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு போதையில் வீட்டுக்கு வந்த சுந்தரத்துடன் லட்சுமி ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சுந்தரம், மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு லட்சுமி, விடிந்ததும் கோயிலுக்குச் செல்ல உள்ளதாகக் கூறி உடலுறவுக்கு மறுத்துள்ளார்.
சுந்தரம் பலமுறை கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்தார். லட்சுமி மசியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரம், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மனைவியை கழுத்து, தாடை என சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருப்பதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்'' என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
பிடிபட்ட சுந்தரத்திடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)