Skip to main content

உடைந்த வாய்க்காலும்; உடனடியாக களத்திற்கு வந்த அமைச்சரும்...!

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழக முதல்வர் தொடங்கி தி.மு.க. அரசின் அமைச்சர்கள், அரசு நிர்வாகமும் துரிதமாக களப்பணியாற்றுவது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

புயல், மழை பாதிப்பைப் போலவே பாரம்பரியமான ஒரு பெரிய வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால்..., அதிலிருந்து வெளியேறும் தண்ணீரால் விளைந்த பயிர்கள், மரம், செடி, கால்நடைகள்  முதல் பொதுமக்கள் வரை பெரிய அளவிலான பாதிப்பைத் தாங்க வேண்டியுள்ளது. ஆனால் அப்படியொரு பெரிய பாதிப்பை ஏற்படா வண்ணம், செய்தி கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்து ஈரோட்டை நோக்கி  சில மணி நேரத்திற்குள் விரைந்து வந்து களப்பணியில் நேரடியாக இறங்கினார் மூத்த அமைச்சரான சு.முத்துசாமி.

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் நீர் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து ஏழாயிரம் விளை நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறுவதுடன் மேலும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் கசிவு நீரால் விவசாயம் செய்ய முடிகிறது., அதோடு கால்நடை வளர்ப்புக்கும் பல கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும் இந்த பவானிசாகர் அணை மூலம் வருகிற கீழ்பவானி வாய்க்கால் நீர் ஆதாரமாக உள்ளது.

 

இது போக கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக பவானிசாகர் அணை நீர் பயன்பட்டு வருகிறது. மொத்தமாக அணையிலிருந்து 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் பெருந்துறை, ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு அருகே கீழ்பவானி வாய்க்கால் நீர் செல்கிறது. இந்த வாய்க்காலின் தரைதளத்தில் கசிவு நீர் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  10 ந் தேதி மாலை 4 மணி அளவில் திடீரென இந்த கசிவுநீர் கான்கிரீட் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கசிவுநீர் செல்லும் பாதையில் வெள்ளம் புகுந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. அன்றைய இரவில் வாய்க்காலின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இந்த தண்ணீர் பாலப்பாளையம், சின்னியம்பாளையம், கூரப்பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம் பாளையம் எனச் சுற்றுவட்டார கிராமங்கள் செல்லும் வழியில் உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் வாய்க்கால் மேட்டில் இருந்து பாலப்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் கூரப்பாளையம் செல்லும் தார் ரோடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ரோடுகளில் அரிப்பு ஏற்பட்டன. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. தவிர வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட கரையிலும் எதிர்புற கரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த வழியாகவும் தண்ணீர் வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் மூலக்கரை, நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

 

சென்னையிலிருந்த அமைச்சர் முத்துசாமிக்கு இது குறித்த தகவல் சென்றதும் அதிகாரிகளை உடனடியாக அங்கு செல்ல உத்தரவிட்டார். அதேபோல் பவானி சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரை நிறுத்தவும் ஆணையிட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் போலீசார் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் பாலப்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர்  வேலை பார்த்து வருகின்றனர். வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அந்த டெக்ஸ்டைல்ஸ் மில்லை சுற்றிலும் சூழ்ந்து நின்றது. இதனால் அங்கு இரவு நேரப் பணியில் இருந்த தொழிலாளர்கள்  வெளியில் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். 

 

இது சம்பந்தமாகப் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்துக்கு வந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அரண் போல் நின்று மில்லிலில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியே கூட்டி வந்தனர். மேலும் அருகே உள்ள கிராமங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அந்த இரவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானிக்கு வாய்க்காலுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த  வாழை, நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி கூறியிருக்கிறார். 

 

சென்னையிலிருந்து 11 ந் தேதி காலையில் ஈரோடு வந்த அமைச்சர் முத்துசாமி நேரடியாகக் கரை உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால் பகுதிக்குச் சென்று கரையைப் பலப்படுத்தும் பணியைத் தொடங்கினார். இரண்டு நாட்களாக அடிக்கடி அங்கேயே முகாமிட்டு வேலைகளைத் துரிதமாகச் செய்ய வைத்து விட்டே 12 ந் தேதி மாலை சென்னை கிளம்பினார். துறை ரீதியான பணிகளுக்காக சென்னையில் இருந்த அமைச்சர் ஒரு பிரதான வாய்க்காலின் கரை உடைந்துவிட்டது என்ற தகவல் கேள்விப்பட்டதும் விரைந்து வந்து களப்பணியாற்றியது விவசாயிகள், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்