Skip to main content

கலைஞரின் அருமை இனிமேல் தெரியும்! -தவிப்பில் தமிழகத்துப் பெண்கள்!

ka

 

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கிறது பெரும் கூட்டம்.  தொலைக்காட்சியில் இந்தக் காட்சியைப் பார்த்து நம்மால் போக முடியவில்லையே என்னும் தவிப்பு பலருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் கலைஞர் மீது அபிமானம் கொண்ட அத்தனை பேரும் சென்னை சென்று நேரில் அஞ்சலி செலுத்துவதென்பது நடக்கக்கூடிய காரியம் அல்ல.  ஆனாலும், இருக்கும் இடத்திலிருந்தே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

 

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி வெளிவந்தவுடன், நேற்று இரவிலிருந்தே தமிழகத்தில் எங்கும் பேருந்துகள் ஓடவில்லை. அதனால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.  அனைத்து ஊர்களிலும் கடைகளை அடைத்துவிட்டார்கள். காவல்துறையும் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.  

 

விருதுநகர் மாவட்டத்திலும் பல இடங்களிலும் திமுகவினரும் பொதுமக்களும் கலைஞருக்கு இரங்கல் பேனர் வைத்திருந்தனர். திராவிட இயக்கங்களின் தொட்டில்கள் என்று சலூன் கடைகளைச் சொல்வார்கள். கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு, கதவில் இரங்கல் பேனரை வைத்திருந்தனர். துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்றில்,  பிளாஸ்டிக் சேர் ஒன்றில் கலைஞர் போட்டோவை வைத்து,  தேங்காய் உடைத்து, பழங்களில் அகர்பத்தி ஏற்றி, தெய்வ வழிபாடு போல நடத்தியிருந்தனர். சிவாஜி மன்றங்களும் சிவாஜியின் பாசத்துக்குரிய நண்பர் என்ற வகையில், கலைஞருக்கு தங்கள் பாணியில் இரங்கலைத் தெரிவித்திருந்தனர். 


ஐந்து தடவை தமிழக  முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, எம்.ஜி.ஆர். அளவுக்கு பெண்களின் ஆதரவு இறுதிவரையிலும் கிடைக்கவில்லை. அதனாலேயே, திமுக வாக்கு வங்கி என்பது  அதிமுகவைக் காட்டிலும் குறைவானதாக இருக்கிறது என்பது பொதுவான அரசியல் கணக்கு.  கலைஞர் இயற்கை எய்திவிட்ட நிலையில்,  ‘கலைஞரை ஏன் பிடிக்கவில்லை?’ என்று கேட்டோம் பெண்கள் சிலரிடம். 

 

mani

 

“இப்ப கொஞ்ச நாளா டிவில அவரைப் பத்தி நிறைய சொல்லுறாங்க. இவ்வளவு பண்ணிருக்காரா? இதெல்லாம் அப்பவே  தெரியாம போச்சேன்னு நாங்களே வருத்தத்துல இருக்கோம். அவரை நாங்க என்னமோ வெறுத்த மாதிரி பேசாதீங்க.” என்று கோபித்துக்கொண்டார் மணிமாலை.   

 

in

 

“எம்.ஜி.ஆர். பிடிக்கும்னா நம்பியாரைப் பிடிக்காது. சினிமா பார்த்துப் பார்த்து எங்க மனசு இப்படித்தான் ஆயிப்போச்சு. எம்.ஜி.ஆருக்கு கெடுதல் பண்ணுனாரு கருணாநிதின்னு எல்லாரும் சொல்லிச்சொல்லி, அதையே ஜெயலலிதாவும் பேசிப்பேசி, நாங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டே ஓட்டு போட்டோம். அதே நேரத்துல, அதிமுக ஆட்சி சரியில்லைன்னு தெரிஞ்சப்ப, வீட்ல உள்ளவங்க எடுத்துச்சொல்லி,  திமுகவுக்கும் ஓட்டு போட்டிருக்கோம். என்னமோ போங்க.. அவரு இறந்ததும் எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு. பெண்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்த ஒரு பெரிய மனுஷனை,   அவரு உசிரோட இருந்தப்பவே  நல்லவிதமா மதிக்கலையேன்னு மனசு கிடந்து அரிக்குது.” என்றார் இன்னாசியம்மாள். 

 

me

 

ஸ்டெல்லா மேரி என்பவர் “திருமண உதவித் திட்டம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை,  கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, பெண்கள் சுய உதவிக்குழு இப்படி எத்தனையோ பண்ணிருக்காருங்க. வீட்டுக்கு வீடு கலர் டிவி அவரு கொடுத்ததுதான். பொத்தாம் பொதுவா எல்லா பெண்களும் அவரை வெறுத்தாங்கன்னு சொல்ல முடியாது. அப்படியிருந்தா, திமுக இன்னைக்கு வரைக்கும்  இந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை பிடிக்கும்தான். பெண்ணென்பதால், ஜெயலலிதாவையும் பிடிக்கும்தான். என்னைப் பொறுத்தவரைக்கும்,  கலைஞரைப் பிடிக்கவே  பிடிக்காதுன்னு இனியும் எந்த ஒரு பெண்ணும் சொன்னா, நன்றி விசுவாசம் இல்லாதவங்கன்னுதான் நான் சொல்லுவேன்.” என்றார் உடைந்த குரலில்.   

கலைஞரின் அருமை இனிமேல்தான் தெரியும்!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்