Skip to main content

'திராவிடத்தின் அடிப்படை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக பார்க்க முடிகிறது'-கனிமொழி பேச்சு 

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'Basic Dravidianism can be clearly seen in Congress manifesto' - Kanimozhi speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வந்துள்ளார். சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவை செல்ல இருக்கிறார்.

நெல்லை வந்துள்ள ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில்  இந்தியா கூட்டணி சார்பில்  நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில்,''நான் அடிக்கடி ராகுல் காந்தியிடம் சொல்வது என்னவென்றால் தமிழ்நாடு உங்களை எப்பொழுதுமே வரவேற்க காத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள். அதற்கு ஒரு உதாரணம் காலையிலிருந்து தகித்துக் கொண்டிருந்த வெயில் ராகுல்காந்தி இங்கே கால் வைத்தவுடன் பூங்காற்றாக மாறி உங்களுக்கு குடை பிடித்துக் கொண்டிருக்கிறது. வரக்கூடிய தேர்தல் என்பது நாம் இந்த நாட்டை, இந்த ஜனநாயகத்தை, நம்முடைய மூதாதையர்கள், இந்த நாட்டின் தலைவர்கள் இந்த நாட்டை எப்படி காண வேண்டும் என்று கனவு கண்டார்களோ அந்த கனவை நாம் மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இது என்பதை புரிந்து கொண்டு நாம் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் பாஜகவிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது.

ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எதிர்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அதானிகள் பற்றியும், அம்பானிகள் பற்றியும் கேள்வியாக பொழிந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நாடாளுமன்றத்தில் இருந்து விலக்குவதற்கு அத்தனை வழி வகைகளையும் செய்ததுதான் பாஜக. எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும். கேள்வி கேட்கக்கூடிய அத்தனை பேரையும் மௌனமாக எதைச் செய்ய வேண்டும் என்றாலும் செய்ய தயாராக இருக்கும் ஒரு இயக்கம்தான் பாஜக. அதனால் இந்த நாட்டில் பேச்சுரிமையைக் காப்பாற்ற வேண்டும். சாதாரண சாமானிய மக்களுடைய உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் காங்கிரசும் திராவிட கழகமும் தொடர்ந்து இணைந்து இருப்பது அவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவும், பார்ப்பதற்கே கொஞ்சம் மனதிற்கு வருத்தம் தரக்கூடிய ஒன்றாக கூட இருக்கிறது என நினைக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக நாம் எதை நினைக்கிறோமோ அதை இன்று நாம் காங்கிரஸ் உடைய தேர்தல் அறிக்கையில் துல்லியமாக தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்