
தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் நேற்றே டாஸ்மாக்கில் மதுவிற்பனை களைகட்டியது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 217.96 கோடி ரூபாய் மது விற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 50.04 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. திருச்சி மண்டலம்- 42.59 கோடி ரூபாய், சேலம் மண்டலம்- 40.85 கோடி ரூபாய், கோவை- 41.28 கோடி ரூபாய் என மது விற்பனை நடந்துள்ளது.

இந்நிலையில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை. ஆனால், கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன. அவை உடனடியாக மூடப்பட வேண்டும்.
மது குடிப்பகங்கள் தான் கரோனா பரவல் மையங்களாகத் திகழ்கின்றன. ஆனாலும் அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.