
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து சாஸ்திரி நகர்ப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்றாகத் திரண்டு வந்து சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இந்த திடீர் சாலை மறியலால் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், வேலைக்குச் சென்ற பணியாளர்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை' என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள், உங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)