Barkur - Pannari check posts police intensive surveillance!

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவைச் சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவைச் சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.

Advertisment

தமிழக - கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பிச் செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 3வது நாளாக சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்திலிருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள், கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூர் செல்லக்கூடிய அனைத்து கார், பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களைப் பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Advertisment

இதேபோல் தமிழக - கர்நாடகா எல்லைப் பகுதியான காரபள்ளம் சோதனைச் சாவடி, பாரதிபுரம், எல்லகட்டை சோதனைச் சாவடி, பண்ணாரி சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனைச் சாவடி வழியாக நாள் ஒன்றுக்கு நூற்றுக் கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.