Bargur private school girl issue Krishnagiri collector explanation

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிவராமனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக இவர் இந்த வழக்கில் சிக்கிய நிலையில் சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Bargur private school girl issue Krishnagiri collector explanation

Advertisment

இந்த பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனைத் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையில் உள்ள என்.சி.சி. தலைமை இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது . இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. கைது செய்யப்பட்ட சிவராமன் என்ற நபருக்கும் என்.சி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. என்.சி.சி. முகாம் தொடர்பாகப் பள்ளியில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. இதே போன்று எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாகப் புகார் பெற்ற உடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bargur private school girl issue Krishnagiri collector explanation

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனை, உளவியல் உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றத்தை மறைக்க முயன்ற நபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். வேறு எந்த பள்ளிகளில் இதுபோன்ற போலி முகாம்கள் நடத்தியுள்ளனர் என்ற கோணத்திலும் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொந்தரவு, பலியால் வன்கொடுமை போன்ற புகார்களை 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.