Bargained bribe! Anti-corruption department arrested one in trichy

திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது. அந்த காலி மனையில் வீடு கட்ட எண்ணிய நாகராஜன், கடந்த 14.8.2023 அன்று தனது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டுவதற்காக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் 48 ஆவது வார்டு வரி வசூல் மையத்திற்கு சென்றார்.

Advertisment

அங்கிருந்த பில் கலெக்டர் ராஜலிங்கம் (54) என்பவரை சந்தித்து வரி செலுத்த விவரம் கேட்டுள்ளார். பில் கலெக்டர் ராஜலிங்கம், நாகராஜனிடம் காலி மனை வரி விதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்து ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.

Advertisment

அதன் பேரில் நாகராஜன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 23.8.2023 அன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜலிங்கத்தை சந்தித்து காலி மனை வரி விதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார். விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட பில் கலெக்டர் ராஜலிங்கம், நாகராஜனின் காலி மனைக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்து கொடுக்க தனக்கு ரூ. 7,000 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பின் நாகராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் பில் கலெக்டர் ராஜலிங்கம் 2,000 ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ. 5,000 கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து கொடுக்க முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் நாகராஜனுக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதனை ஏற்ற நாகராஜன், இன்று பகல் 12 மணி அளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மையத்திற்கு சென்றார். அங்கு பில் கலெக்டர் ராஜலிங்கத்திடம் அவர் கேட்ட ரூ. 5,000-ஐ நகராஜன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ராஜலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் பில் கலெக்டர் ராஜலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது அதில் இருந்த கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.