Bar Council Of Tamil Nadu And Puducherry

தமிழகத்தில் ஏராளமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதால், நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா காரணமாக 150 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், இந்திய பார் கவுன்சில், தமிழகத்தில் உள்ள 262 வழக்கறிஞர்கள் சங்கங்களுடன், தமிழ்நாடு பார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.

Advertisment

அதில், வீடியோ கான்பரன்சிங் முறை, இன்டர்நெட் வசதியின்மையால் அனைத்து தரப்பு வழக்கறிஞர்களால் வழக்குகளில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதால், நேரடியாக விசாரணை நடத்த நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடை பெறாத காரணத்தால், குடும்ப நல நீதிமன்ற வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள் என பல வழக்குகள் தேங்கி உள்ளது. விபத்து இழப்பீட்டை பெற முடியாமலும், வழக்குகளில் தீர்வு கிடைக்காமலும் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், அவர் உடனடியாகப் பரிசீலனை செய்து, நீதிமன்றங்களைத் திறந்து, நேரடி விசாரணை நடைபெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.