Skip to main content

வழக்கறிஞர் சங்கத் தேர்தல்களில் பணமும் மதுவும் பாய்ந்தோடுகிறது! - உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

Bar Association elections  High Court dissatisfied

 

வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்களில் பணமும், மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2018ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் மணிவாசகம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சங்கத்திற்கு சந்தா தொகை செலுத்தாத வழக்கறிஞர்களுக்கு மொத்தமாக சந்தா தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறி, அகமது ஷாஜகான் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் வழக்கறிஞர் சங்கத் தேர்தலை நடத்த சீனிவாசன், ராஜசேகரன் மற்றும் பாலகுமார் ஆகிய மூவர் அடங்கிய சிறப்புக் குழுவை நியமித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி,  சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதேஷ் என்பவர், சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அமர்வு, சிறப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள இரு வழக்கறிஞர்கள், தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞரின் வேட்புமனுவை முன்மொழிந்து உள்ளனர் என்ற மனுதாரர் வாதத்தை ஏற்று, பார் கவுன்சில் உத்தரவை ரத்து செய்தது.

 

மேலும், ஒரு முறைக்கு மேல் போட்டியிட தடைவிதித்து பார்கவுன்சில் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்த நீதிபதிகள், ‘ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அடுத்த தேர்தலுக்குப் பின் நடக்கும் தேர்தலில் அவர் போட்டியிட அனுமதிக்கலாம். சேலம் வழக்கறிஞர் சங்கத்திற்கு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தலை நடத்திமுடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வேணுகோபால்,  தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர், ஏற்கனவே தேர்தல் அதிகாரியாக உள்ள மணிவாசகத்துடன் இணைந்து தேர்தல் நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.  

 

மேலும் நீதிபதிகள், ‘வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பணமும், மதுபானமும் பாய்ந்து ஓடுகிறது. உன்னதமான வழக்கறிஞர் தொழில் செய்யும் வழக்கறிஞர்கள், மதுபானத்திற்காக தங்களை விற்றுவிடுகின்றனர். ஜாதி, மத ரீதியாக வாக்குகளைக் கவரும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கும், வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் நடத்தப்படுகிறது’ என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்