Bapasi explained Controversy over omission of Tamil Thai greetings at Seeman's show

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக்காட்சி ஜனவரி 12ஆம் தேதி (12.01.2025) வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தகங்களை வாங்க, பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சீமான் உள்ளிட்ட பலரும் எழுந்து நின்றவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ பாடலுக்கு பதிலாக பாரதிதாசனின் பாடல் ஒன்று பாடப்பட்டது. தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் எனக் குறிப்பிட்டு வேறு ஒரு பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், “திராவிடம் மற்றும் இந்திய சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளிடம் கூட்டணிக்காக ஒருபோதும் சரணடைய மாட்டேன். தனித்துப் போட்டி எனக் கூறும்போது தான் கூட்டத்தில் அதிகமான கைத்தட்டல் வருகிறது” என்று பேசினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால் (பபாசி) நடத்தும் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சீமான் பேச்சுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பபாசி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பபாசி கூறியிருப்பதாவது, ‘புத்தக வெளியீட்டு விழாவை டிஸ்கவரி புக் பேலஸ் நடத்த அனுமதித்தது வழக்கமான நடைமுறை தான். முதல்வரை, முன்னாள் முதல்வரை சீமான் ஒருமையில் விமர்சித்து நிகழ்வில் பபாசிக்கு தொடர்பில்லை. புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கும், பபாசிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது’ என தெரிவித்துள்ளது.

Advertisment