புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இரவு மிதமான மழை பெய்தது. அதே போல கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்த நிலையில் சுமார் 9.30 மணி அளவில் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கும் இடையில் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலை ஓரத்தில் கீரமங்கலத்தின் அடையாளமாக நின்ற பெரிய ஆலமரங்களில் ஒன்று அடியோடு சாய்ந்தது.
பெரிய ஆலமரம் சாலையில் சாய்ந்ததால் அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் மின்கம்பிகளில் சாய்ந்ததால் மின்கம்பிகளும் அறுந்து மின்கம்பங்களும் சாய்ந்து நிற்கிறது. மேலும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.