புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் திருவிழா 30 நாட்கள் வரை நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. திருவிழா தொடங்க உள்ளதால் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் நேற்று முன்தினம் (25.06.2025) திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம், காசுகள் கோயில் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தான் நேற்று (26.06.2025) இரவு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஒரு பெரிய அன்னதான உண்டியலை தூக்கிச் சென்று மூக்குடி அருகே வைத்து பூட்டை உடைத்துப் பார்த்துள்ளனர். உண்டியல் காலியாக இருந்ததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் அதே பகுதியில் உண்டியலை போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் இன்று (27.06.2025) காலை கோயிலில் உண்டியலை காணாமல் தேடிய போது உண்டியல் மூக்குடி பகுதியில் கிடப்பதாக தகவல் அறிந்து அறந்தாங்கி போலிசார் உண்டியலை மீட்டு வந்துள்ளனர். மேலும் கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். 

திருவிழா நடத்த ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது. அதனால் திருவிழா தொடங்கும் முன்பு கோயில் உண்டியலை கோயில் நிர்வாகம் திறந்து எடுப்பார்கள் என்பதை தெரிந்த திருடர்கள் உண்டியல் முதல் நாளே திறந்தது தெரியாமல் காலி உண்டியலை திருடிச் சென்று ஏமாற்றமடைந்துள்ளனர் என்கின்றனர் பக்தர்கள். அறந்தாங்கி பகுதியில் அடுத்தடுத்து பல கோயில்களில் உண்டியல் திருட்டுகள் நடந்திருப்பது போல தற்போது நகரில் நெருக்கடியான இடத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் உண்டியலையும் திருடியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த திருட்டிலும் யாரையும் கைது செய்யாததால் அடுத்தடுத்து திருட்டுகள் தொடர்கிறது என்கின்றனர் பொதுமக்கள். மேலும், வீரமாகாளியம்மன் கோயிலில் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உண்டியல் திருட்டு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.