Skip to main content

“செலவுக்கு காசு இல்ல... துணிவு படம் ஐடியா கொடுத்துச்சு...” - வங்கிக் கொள்ளையில் சிக்கிய இளைஞர்! 

 

Bank theft issue in Dindigul police arrested one youngster

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று காலை நடந்த பயங்கர கொள்ளைச் சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை பதற்றமடைய வைத்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் இன்று காலை வங்கிப் பணியாளர்கள் 10 மணி அளவில் வங்கிக்கு வந்து தங்கள் பணிகளைத் துவங்கியுள்ளனர். இரண்டு பெண் பணியாளர்கள், வங்கி மேலாளர் உட்பட நான்கு பேர் வங்கிக்குள் இருந்த நிலையில், வாடிக்கையாளர்போல் வங்கிக்குள் நுழைந்த ஒரு இளைஞர், வங்கி பரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை கேட்டுள்ளார்.

 

அதற்கு அங்கிருந்த ஒரு பணியாளர் வாடிக்கையாளர் போல் வந்த அந்த இளைஞரின் சந்தேகங்களை விவரித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரம் அந்த இளைஞர் தன் கையில் வைத்திருந்த ஒரு வகையான ஸ்ப்ரேவை அங்கிருந்த பணியாளர் முகத்தின் மீது அடித்துள்ளார். அதில் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கத்தியுள்ளார். இதனைக் கண்டு அருகிலிருந்த இரண்டு பணியாளர்களும் நெருங்கி வர அவர்கள் மீதும், அந்த இளைஞர் ஸ்ப்ரே அடித்துள்ளார்.

 

அவர்கள் மூவரும் அந்த ஸ்ப்ரேவில் நிலைகுலைந்து இருக்க, ஏற்கனவே தயாராக வந்திருந்த அந்த இளைஞர் தான் வைத்திருந்த டேப் மூலம் வங்கி ஊழியர்களின் கைகளைக் கட்டினார். இதில், வங்கியின் உள்ளே இருந்த ஒரு பணியாளர் வெளியே நடந்த சம்பவத்தினை அறிந்து சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரிடம் மாட்டாமல் வங்கிக்கு வெளியே வந்து ‘கொள்ளையன்... கொள்ளையன்... பேங்க்ல கொள்ளையடிக்கிறான்...’ எனக் கத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக வங்கிக்குள் சென்று அந்தக் கொள்ளையனை மடக்கிப் பிடித்து அவரின் கைகளைக் கட்டியுள்ளனர்.

 

பிறகு வங்கி ஊழியர்கள், திண்டுக்கல் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சேர்ந்த கலில் ரகுமான் (23) என்பதும் இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலை ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

 

மேற்கொண்டு நடத்திய தொடர் விசாரணையில் அந்த இளைஞர், ‘கல்லூரி முடித்துவிட்டு, வேலைக்கு போகாமல் இருக்கிறேன். செலவுக்கு வீட்டில் தான் பணம் வாங்கி வருகிறேன். தற்போது வீட்டிலும் பணம் கொடுப்பதில்லை. அந்த விரக்தியில் இருந்தபோது, தற்போது வெளியாகியுள்ள துணிவு படத்தை பார்த்தேன். அதில், வங்கியில் கொள்ளையடிக்கும் நிகழ்வு நடக்கும். மேலும் சில படங்களை பார்த்தேன். அதன்பிறகு வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்து ஸ்ப்ரே, ஊழியர்களை கட்டிப் போட டேப், அவர்களைத் தாக்க கம்பி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தேன்’ என்று தெரிவித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கலில் ரகுமானிடமிருந்து காவல்துறையினர், அவர் உபயோகப்படுத்திய ஸ்ப்ரே, கையில் வைத்திருந்த கம்பி, டேப் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !