Skip to main content

வங்கி கொள்ளையர்களை தப்ப விட்டவர்கள் எல்லாம் தேச பக்தர்களா? ஸ்டாலின் அதிரடி தாக்கு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை கொள்ளை அடித்தவர்களை வெளிநாட்டிற்கு தப்ப விட்டவர்கள் எல்லாம் தேச பக்தர்களா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

s


திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 


தனி மனிதர்களை வாழ்த்தும்போது, 'நூறாண்டு காலம் வாழ்க!' என்று வாழ்த்துவார்கள். ஆனால், திராவிட இயக்கத்தை வாழ்த்துவது என்றால், 'இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்,' என்றுதான் வாழ்த்த வேண்டும். இந்த இயக்கம், நம் சமுதாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது. 100 ராமசாமிகள் ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். நம் நாட்டில் படிந்துள்ள அழுக்கு, 2000 ஆண்டு அழுக்கு. அந்த அழுக்கை சில ஆண்டுகளில் துடைத்துவிட முடியாது.

 


அதற்காகத்தான் தந்தை பெரியார், ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்றார். எனவே திராவிடர் கழகத்தின் பணி ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையானது. தந்தை பெரியார், தன்னுடைய 90வது வயதில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய எழுதிய எழுத்தைப் படிக்கும்போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டு, சிறுநீர் கழிக்கவே அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை எல்லாம் கடிதத்தில் எழுதி இருந்தார். பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விடப்போவதாகவும் எழுதி இருந்தார். ஆனால் அதன்பிறகுதான் அவர் தமிழ்நாட்டையே சுற்றிச்சுற்றி வந்தார். ஏராளமான கூட்டங்களில் பேசினார். மாநாடுகளில் பங்கேற்றார். போராட்டங்கள், மறியல்களில் கலந்து கொண்டார். 


தந்தை பெரியார் தன்னுடைய 90வது வயதில் 141 நாள்கள் அலைந்து 180 இடங்களில் பேசினார். 91 வயதில் 131 நாள்கள் அலைந்து 150 இடங்களில் பேசினார். 92 வயதில் 175 நாள்கள் பயணம் செய்து 244 கூட்டங்களில் பேசினார். 93வது வயதில் 183 நாள்கள் அலைந்து 249 இடங்களில் பேசினார். 94வது வயதில் 177 நாள்கள் பயணம் செய்து 229 கூட்டங்களில் பேசினார். 95வது வயதில் அவர் வாழ்ந்த நாள்கள் மொத்தம் 98. அதில் பயணம் செய்த நாள்கள் 35. பேசிய கூட்டங்கள் 42.

 

st


உலகில் இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும், எந்த நாட்டிற்கும் வாய்த்தது கிடையாது. அதனால்தான் அண்ணா அவரைப் பற்றி குறிப்பிடும்போது, பெரியார் ஒரு மனிதர் அல்ல. அவர் ஒரு சகாப்தம். அவர் ஒரு காலக்கட்டம். அவர் ஒரு திருப்பம் என்று சொன்னார்கள்.  


இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதி உரிமையை நாம் பெற்றோம். அந்த உரிமையை தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் நிலைநிறுத்திக் காட்டி இருக்கிறோமா இல்லையா? அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இட ஒதுக்கீடு உரிமையை நிலை நாட்டினோம். சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். நம் தாய்நாடான தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்கிறோம். இருமொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறோம்.


சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம், சமூக சீர்திருத்தத்துறை உருவாக்கம், அருந்ததியினர், சிறுபான்மையினர் நலன், மாநில சுயாட்சிக் கொள்கை என பல சாதனைகளைப் புரிந்திருக்கிறோம். தமிழுக்காக வாதாடினோம். தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து வாதாடும் நிலையில் இருக்கிறோம் என்றால் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரால்தான் இவை எல்லாம் சாத்தியமானது. இந்த சாதனைகள் எல்லாம் திராவிடர் கழகத்தின் சாதனைகள் என்றும் சொல்வேன். 


திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றோடு (ஆக. 27) ஓராண்டு நிறைவடைகிறது. நம்மை ஆளாக்கிய கலைஞர் உருவச்சிலையை தாரமங்கலம் பகுதியில் திறந்து வைத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இப்படி ஒரு பொருத்தம் கிடைக்குமா? இதை திட்டமிட்டு நடத்தவில்லை.


திராவிடர் கழகமும், திமுகவும் ஒரு மரத்துக் கனிகள். இப்போது நாம் ஒன்றாக இருக்கிறோம். திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள். ஒருதாய் மக்கள். திராவிட இயக்கம் என்பது முன்பை விட இப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் எப்போது உருவானதோ அப்போதே அதை வீழ்த்துவோம் என்று சொல்லக்கூடியவர்களும் உருவாகிவிட்டார்கள். அதனால்தான் திராவிட இயக்கங்களை களங்கப்படுத்தும் முயற்சிகளை நம் எதிரிகள் இன்னும் விடவில்லை. நம்மைப்பார்த்து சிலர் தேச விரோதிகள் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிறார்கள். நம்மை அப்படிச் சொல்லிவிட்டு அவர்கள்தான் இன்று நாட்டை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தைப் பிரித்து கொண்டிருக்கிறார்கள்.


சர்வாதிகாரத்தை எதிர்த்தாலே தேச விரோதிகளா? நாங்கள் எப்போதும் ஜனநாயகத்தின் ஏஜன்டுகள். மக்களின் ஏஜன்டுகள். தமிழ்நாட்டின் உடைய, தமிழ் மக்களுடைய ஏஜன்டுகள். ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து வந்தாலும் அதை முதலில் தட்டிக்கேட்போம். எப்படிப்பட்ட அடக்குமுறைகள், என்ன கொடுமைகள்... எதுவந்தாலும் அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அதை முறியடிப்பதுதான் முதல் வேலை என்ற உறுதியோடு கடமையாற்றுவோம்.


காஷ்மீரின் ஜனநாயகத்தை காப்பாற்ற டெல்லியில் 14 கட்சிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதைப் பொறுக்க முடியாதவர்கள் திசை திருப்பிப் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். ஜனநாயகப்படி நடந்தால் அது தேச விரோதமா? அதை வைத்துக்கெண்டு தமிழகத்தை பழி வாங்குவதா? தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களை வழங்காமல் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு மூலம் பழி வாங்குகின்றனர். விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை கொண்டு வந்து பழி வாங்குகின்றனர். அதையெல்லாம் அதிமுக ஆட்சி அடிபணிந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. 


ஜனநாயகத்தின் குரல்வளை எங்கே நெரிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பதற்காகத்தான் தந்தை பெரியார், திராவிடர் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள். அதற்காகத்தான் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார்கள். டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பாற்றி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், 'கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் திமுக இப்போது செய்து கொண்டிருக்கிறது,' என்று பெருமையோடு பேசவில்லையா? 


திமுக, மாநிலக் கட்சியாக இருந்தாலும், அகில இந்தியாவுக்கு எது சரியான அரசியலோ அதைத்தான் தொடர்ந்து செய்வோம். சட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள். இனிமேல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன பயன்? என்கிறார்கள். 'எந்த ஒரு போராட்டமும் வெற்றி அடைந்ததா? தோல்வி அடைந்ததா? என்பது முக்கியமல்ல. நாம் நம் கடமையைச் செய்திருக்கிறோமா? என்பதுதான் முக்கியம்,' என்று தந்தை பெரியார் சொல்லி இருக்கிறார். அதைத்தானே திமுக செய்திருக்கிறது.  


இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய சராசரி மனிதர்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். வாகன விற்பனை 31 சதவீதம் குறைந்து விட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட மோட்டார் தொழிற்சாலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நான்கு மாதங்களில் 3.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். 


இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்தால் பத்து லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என சொல்கின்றனர். இந்திய பொருளாதாரம் சிக்கலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது எனறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெளிவாக சொல்லி இருக்கிறார். பின்னலாடை துறையில் 50 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். 90 ஆண்டுகள் கொடிகட்டி பறந்த ஒரு பிஸ்கட் நிறுவனம், 10 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லி இருக்கிறது. 


இவை அனைத்தையும் மறைப்பதற்காகத்தான் காஷ்மீர் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலதான் சிதம்பரம் கைது என்ற நாடகத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. இப்படியெல்லாம் செய்தால்தான் அரசியல்வாதிகள் இவற்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார்கள். பொருளாதாரச் சீரழிவைப் பற்றி மறந்து விடுவார்கள் என்று திட்டமிட்டு செய்கிறார்கள். நிர்மலா சீதாராமன் அவசரம் அவசரமாக பேட்டி கொடுத்தார்.

 

நாடு அதலபாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தவர்களை வெளிநாட்டிற்கு தப்பவிட்டுவிட்டு அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் தேச பக்தர்களா? இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லும் நாம் தேச விரோதிகளா? அதனால்தான், 'இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம்' என்று தந்தை பெரியார் சொன்னார்.  


தந்தை பெரியார் இறந்தார்... மறைந்தார் என்று சொல்லாமல் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார் என்று சொல்ல வேண்டும் என்று கலைஞர் குறிப்பிடுவார். அத்தோடு அவர் நின்றுவிடவில்லை. பெரியார் முடித்துக்கொண்ட பயணத்தை நாம் தொடர்வோம் என்றும் எழுதினார். அவர் சொன்னதுபோலவே திராவிடர் கழகத்தோடு இணைந்து நாம், தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட ஒருங்கிணைந்து போராடுவோம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

சார்ந்த செய்திகள்