Bangladesh women incident police investigation in salem district

சேலத்தில் கொலை செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக காவல்துறை பராமரிப்பில் இருந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மசாஜ் சென்டர் பெண்ணின் சடலம், இந்தியா வந்திருந்த கணவரிடம் செவ்வாய்க்கிழமை (ஆக. 2) ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (வயது 29). சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் தேஜாஸ் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். சந்தேகத்தின்பேரில் இந்த மையத்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.

Advertisment

இதுகுறித்த விசாரணை ஒருபுறம் நடந்து வந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் 15- ஆம் தேதி, திடீரென்று தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டார்.

சேலம் குமாரசாமிப்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் நடேசனுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல் வாடகைக்கு வசித்து வந்தார். அந்த வீட்டில் உள் அலமாரியில் பெரிய சூட்கேஸூக்குள் அவருடைய சடலத்தை அடைத்து வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

தேஜ் மண்டல் தன்னுடைய மசாஜ் மையத்தில் சொந்த நாட்டைச் சேர்ந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய மூன்று பெண்களையும், லப்லூ என்ற ஆண் ஊழியரையும் பணிக்கு அமர்த்தி இருந்தார். அவர்களை, தான் வசித்து வரும் அதே குடியிருப்பில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார்.

காவல்துறை விசாரணையில் அவரிடம் வேலை செய்து வந்த நான்கு பேரும் சேர்ந்துதான், தேஜ்மண்டலை பணத்துக்காக கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் சேலம் மாநகர காவல்துறையினர் திணறி வருகின்றனர்.இதற்கிடையே, தேஜ்மண்டலின் சடலம் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வங்கதேசத்தில் வசித்து வரும் அவருடைய கணவர் முகமது ராக்கிக்கு காவல்துறையினர் இந்திய தூதரகம் மூலமாக தகவல் அளித்தனர்.

ஆனால் இந்தியா வந்து செல்லும் அளவுக்கு வசதி இல்லாததால் உடனடியாக வர முடியாது என்று அவரும் கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். இதனால், கடந்த 9 மாதத்திற்கும் மேலாக தேஜ்மண்டலின் சடலம் காவல்துறை கண்காணிப்பில், சேலம் அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

இது ஒருபுறம் இருக்க, முகமது ராக்கி இந்தியா வந்து செல்வதற்கான விமான போக்குவரத்து செலவு, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுக்கான செலவுத்தொகையை காவல்துறையினர் அவருக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து முகமது ராக்கி, ஜூலை 31- ஆம் தேதி சேலம் வந்து சேர்ந்தார். அவரிடம், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ், எஸ்.ஐ. அருண்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், ''தனதுமனைவி அழகுக்கலை தொழில் செய்வதற்காக சொந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். கடந்த 2016- ஆம் ஆண்டு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் இந்தியா வந்துவிட்டார். அவருடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்காததால் அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்றபோதுதான், தேஜ்மண்டல் பாலியல் தொழில் செய்து வந்திருப்பதே தெரிய வந்தது,'' என்று முகமது ராக்கி கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனை சடவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த தேஜ்மண்டலின் சடலத்தை முகமது ராக்கி அடையாளம் காட்டினார். இறந்தவர்ஒருமாற்றுத்திறனாளி. அதை வைத்து தனது மனைவியின் சடலத்தை அடையாளம் காட்டினார்.

இந்நிலையில், மசாஜ் மையங்கள் நடத்தி வந்த கட்டடங்களுக்கும், குடியிருந்த வீட்டிற்கும் தேஜ்மண்டல் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுத் தருமாறு முகமது ராக்கி கேட்டிருந்தார். அத்தொகையை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்திலேயே தேஜ்மண்டலின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ரிஷி, நிஷி, ஷீலா, லப்லூ ஆகியோரின் படங்களைக் காண்பித்து விசாரித்தபோது, அவர்களில் இருவர் வங்கதேசத்தில் தேஜ்மண்டலின் வீட்டில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வந்தது. கொலையாளிகளைப் பிடிக்கவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.