
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பகுதியில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக இருந்து வந்த 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தையூர் பகுதியில் சட்டவிரோதமாகத் தங்கி சாலைகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த 16 பேர் மீது தையூர் வீஏஓ வேலு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். வீஏஓ கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் 16 பேரும் வங்கதேசத்தில் இருந்து எவ்விதமான முறையான ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக வந்து குப்பைகளைச் சேகரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆவணங்களின்றி இந்தியா வந்ததாகத் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட்களும் இல்லாதது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் வந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் கேளம்பாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேடாக இந்தியா வந்து தையூர் பகுதியில் ஆறு மாத காலமாகத் தங்கி இருந்தது கேளம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.