Skip to main content

தமிழக போலீசாருக்கு கொடுக்கப்பட்ட திடீர் அலர்ட்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
 Hotel bombing incident; Instructions received by Tamil Nadu Police

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்''என்றார்.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.

nn

இந்த நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவாலயங்கள், ஆலயங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகப் பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரு மற்றும் ஆந்திர மாநிலத்தின் தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேட்டி அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு; போராட்டத்தில் குதித்த விவசாய சங்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Denial of entry for wearing a vest in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாகடி சாலையில் ஜி.டி. வேர்ல்ட் என்ற தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், நேற்று முன்தினம் (16-07-24) பகீரப்பா என்ற விவசாயி தனது மகன் நாகராஜுடன், அங்குள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார். 

ஆனால், பகீரப்பா வேட்டி அணிந்து வந்திருந்ததால், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பகீரப்பாவும், அவரது மகனும் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனாலும், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும், வேட்டி அணிந்து வந்தததால் விவசாயிக்கு அனுமதி அளிக்காத வணிக வளாகத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கன்னட அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர், நேற்று அந்த தனியார் வணிக வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விவசாயியை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதற்காக வணிக நிர்வாகம், விவசாயி பகீரப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது, ‘வேட்டி அணிந்து வந்த விவசாயி வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

Next Story

மத்திய அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
The High Court rejected the Union Minister's request

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.  இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை  செய்து வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். 

The High Court rejected the Union Minister's request
கோப்புப்படம்

இதற்கிடையே திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஷோபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (10.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை சார்பில் வாதிடுகையில், “இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை வெள்ளிக்கிழமை (ஜூலை 18 ஆம் தேதி) வரை தள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக இருந்தால். அதுவரை மனுதாரர் மீது எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனைக் கேட்டறிந்த நீதிபதி, “மத்திய அமைச்சராக உள்ள பொறுப்புள்ள குடிமகனாக உள்ள ஒருவர், குண்டு வைத்த நபர் தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருக்கும் பட்சத்தில் பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டுமல்லவா. எனவே இந்த வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது” எனக் கூறி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.