Skip to main content

பெங்களூரு குண்டு வெடிப்பு; சென்னையில் முகாமிட்ட என்.ஐ.ஏ

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Bangalore blast incident; NIA raid in Chennai

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் 01/03/2024 பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை  விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அதை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னையில் மண்ணடி பகுதியில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் ஒரு வீட்டில் தற்பொழுது சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்ய உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.