Advertisment

“பெரியார் பல்கலை. விவகாரம்; முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி” - ராமதாஸ்

ban should be imposed  interviews  post of Registrar of Periyar University

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பதிவாளர் பணிக்கு மார்ச் ஒன்றாம் தேதி நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைவதற்கு சில வாரங்கள் முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது சட்ட விரோதமானது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் 2027-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், துணைவேந்தர்கள் அவர்களின் பதவிக்காலத்தின் கடைசி 3 மாதங்களில் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது; எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கக் கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்று விட்டார். புதிய துணைவேந்தரை நியமிக்க முடியாத சூழல் நிலவுவதால் அவரது பதவிக்காலம் வரும் மே 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்காலம் முடிவடைவதற்கு 2 மாதங்கள் 18 நாட்களுக்கு முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது அரசின் விதிகளை மீறியது ஆகும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் துணைவேந்தருக்கு அடுத்தபடியாக அதிக பொறுப்பும், முக்கியத்துவமும் நிறைந்த பதவி பதிவாளர் பதவி ஆகும். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆணையிடவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் பதிவாளருக்குத் தான் அதிகாரங்கள் உள்ளன. தற்போதைய துணைவேந்தர் மீது இப்போது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் சில குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மீதமுள்ள புகார்கள் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைவேந்தர் தடுத்து வருகிறார்.

துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பதிவாளர் பதவியில் நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்டால், அவர் தம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஆணையிடக்கூடும் என்பதால், தமது பதவிக் காலத்திலேயே தமக்கு விசுவாசமான ஒருவரை பதிவாளராக நியமிக்க துணைவேந்தர் நினைப்பதாகவும், அதனால் தான் அவசர, அவசரமாக நேர்காணலை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணைவேந்தரின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அந்தக் குற்றச்சாட்டை புறக்கணிக்க முடியாது.

பல்கலைக்கழக பதிவாளரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான். ஆனால், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவி கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கிறது. தமது மூன்றரை ஆண்டு பதவிக்காலத்தில் பதிவாளர் பணியிடத்தை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத துணைவேந்தர் , ஓய்வு பெறப்போகும் போது பதிவாளரை நியமிக்க துடிப்பது ஏன்?

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான பல முறைகேடு புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய தமிழக அரசு. அதன் அறிவுறுத்தலை மீறி பதிவாளரை நியமிக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe