ADVERTISEMENT

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை...! - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!

05:43 PM Nov 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலில் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்தபடி இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும் இது எதிரொலிக்கக் கூடியவைதான். ஆனால், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் உரிமைகளில் தலையிட விரும்பாமல் அரசியல் கட்சிகளின் இத்தகைய கோரிக்கைகளை நிராகரித்தே வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரோஷி, “தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்குப் பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

இவரது கருத்தை வரவேற்றுள்ள பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியின் கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை. கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பா.ம.க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT