Skip to main content

நாய், பூனை வளர்க்க தடை!! மீறினால் 10 ஆயிரம் அபராதம்!!

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
IIT

 

சென்னை ஐஐடியில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்க ஐஐடி நிர்வாகம் தடை விதித்து, மீறினால் 10-ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் வகுப்பிற்கு தினமும் தனது வளர்ப்பு நாயுடன் வந்து உடன் கூட்டி வந்த நாயை பல்கலைகழக வளாகத்தில் கட்டி வைத்து விட்டு  வகுப்பறைக்கு வருவதை பழக்கமாக கொண்டிருந்தார்.  இது குறித்து  பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவி இது தொடர்பாக மத்திய அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தியிடன் புகார் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து அண்ணா பல்கலைகழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்த நிலையில் சென்னை ஐஐடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பானது, சென்னை ஐஐடி வளாகத்தில், விடுதியில் உள்ள மாணவர்கள் நாய், பூனை போன்ற எந்த செல்லப்பிராணிகளையும் வளர்க்க கூடாது. மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற வாய் மொழி உத்தரவு வெளியிட்ட நிலையில் தற்போது அந்த அறிவிப்பை முக்கியப்படுத்தும் நோக்கில் விடுதி அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டியுள்ளது ஐஐடி நிர்வாகம்.

 

ஏற்கனவே சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி சாப்பிட்டது தொடர்பாக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது செல்ல பிராணிகளை வளர்க்கக்கூடாது அப்படி வளர்த்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

17 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்கள்; ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் சிகிச்சை 

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
17 people were bitten by rabid dogs in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கம் கடைவீதியில் வியாழக்கிழமை(8.2.2024) மாலை வெறி நாய் ஒன்று கடைவீதிக்கு வந்தவர்களை கால்களில் கடித்து குதறியது. நாய் கடித்ததும் ரத்தம் கொட்ட கொட்ட கதறிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதனையடுத்து சற்று நேரத்திற்குள் தென்நகர் பகுதியில் ஒரு நாய் இதே போல அடுத்தடுத்து பலரை கடித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் கறம்பக்குடி பகுதியே பரபரப்பாகவும் பதைபதைப்பாகவும் இருந்தது. 

இதில் கறம்பக்குடி இந்திரா நகர் பார்த்திபன் (35), புதுப்பட்டி சரவணகுமார் (41), மாரிமுத்து (44), தட்டாவூரணி கௌரி (25), பேராவூரணி கறம்பக்காடு ஓமவயல் சூரியமூர்த்தி (70), வெட்டன்விடுதி வினோத்குமார் (30), ஆலங்குடி லோகநாதன் (47), அங்கன்வாடி சுபாஷ் (15), தென்நகர் அம்பிகா (31), சின்னையன் (63), விஜயராமன் (68), சுக்கிரன்விடுதி சுரேஷ்குமார் (45) உள்பட 17 பேர் காயமடைந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று காயங்களுக்கும் மருந்துகள் கட்டிய பிறகு 12 பேரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே ஊரில் 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் வேதனையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தனை பேரை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே பீதியடைந்துள்ளனர். 

இதே போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 4 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் குதறி கொன்று போட்டதைப் பார்த்து விவசாயி கதறி அழுதார்.

தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து ஏராளமான விபத்துகளுக்கு காரணமாவதுடன் கால்நடைகளையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. மேலும் கறம்பக்குடி போல மனிதர்களையும் கடித்துக் குதறி வருகிறது.

Next Story

எண்ணெய்க் கசிவு; வல்லுநர் குழு சென்னை வருகை

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
oil spill; Expert team visits Chennai

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (14.12.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையின்போது தமிழக அரசு, சிபிசிஎல் நிறுவனம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீனவர்கள் தரப்பு என 4 தரப்பினரும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். மீனவர்கள் தரப்பில் வாதத்தை முன்வைக்கையில், “மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படாமல் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஎல் நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் 33 டேங்கர்களில் தலா 220 லிட்டர் என்ற வீதத்தில் 7600 லிட்டர் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணெய்க் கழிவுகள் அகற்றும் பணிக்காக 75 அதிநவீன படகுகள், 4 ஜேசிபிகள், 2 ஆயில் ஸ்கிம்மர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், “மணலி தொழிற்சாலை சங்கங்கள் எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது. மீனவர்களே எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபடும்போது, மணலி தொழிற்சாலை சங்கங்களும் பணியில் ஈடுபட வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியை டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.” என உத்தரவிட்டு இந்த வழக்கை 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு பாதிப்பை சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தக் குழுவினர் எண்ணெய்க் கசிவு பாதிப்பு மற்றும் எண்ணெய்யின் அளவைக் கண்டறிந்து வருகின்றனர். 100 படகுகள் மற்றும் 400 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் நாளை சமர்ப்பிக்க உள்ளனர். மேலும் எண்ணெய்க் கசிவை அகற்றுவது தொடர்பாக ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து சிறப்பு வல்லுநர் குழுவினர் நாளை சென்னை வருகின்றனர். இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய், 36 ஆயிரத்து 800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.