ADVERTISEMENT

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை..? - தீவிர ஆலோசனையில் முதல்வர்!

11:30 AM Dec 13, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பரவிவரும் ஒமிக்ரான் தொற்று பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 38 ஆக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, இரண்டு நாட்களாக தென் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் 5க்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்த தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் தொற்று தொடர்பாக எடுக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவர்கள் பேசிவருகிறார்கள். கூட்டம் கூடுவதை முடிந்த அளவுக்கு அரசு குறைக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக பொதுஇடங்களில் கூடி இளைஞர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். குறிப்பாக, கடற்கரைகளில் அதிக அளவிலான இளைஞர் பட்டாளம் கூடி புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT