
திருவண்ணாமலை, கிரிவலம் என்பது தென்னிந்தியாவில் பிரபலமானது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டும், திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டும் வருகிறது. ஆனால், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதற்கான தடைமட்டும் இன்றும் அமலில் இருக்கிறது.
வரும் ஜனவரி 28ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி, 29 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
கிரிவலத்துக்கு தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். இதனால் கரோனா பரவல் என்பது அதிகரிக்கும், தற்போது குறைந்துள்ளதாகக் காணப்படும் கரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையுள்ளது. அதனால்தான் இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்கிறார்கள். கடந்த 10 மாதங்களாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதற்குத் தடை இருப்பதால் ஆன்மிக பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர்.