பாலசிங்கம் வீட்டில் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் : வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

balasingam chennai high court

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை, குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வி.கே.டி.பாலன்மீதானவழக்கை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கத்தைக் கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985- ஆம் ஆண்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக, கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ரஞ்சன், மணவைதம்பி ஆகியோர் இறந்துவிட்டனர். ராதாகிருஷ்ணன் அப்ரூவராக மாறிவிட்டார். வி.கே.டி பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார்.

இந்நிலையில், 30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதாலும், இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், இந்த வழக்கில் பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதால், தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வி.கே.டிபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்ரூவர் உள்ளிட்ட சில சாட்சிகள் உயிருடன் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார்.

cnc

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக, இந்த வழக்கை ரத்து செய்யமுடியாது. உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும். மேலும், நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணமல் போனது ஆகியவை, வழக்கை ரத்து செய்வதற்கு நல்ல காரணம் அல்ல.இந்த வழக்குத்தொடர்பான ஆவணங்களை, அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை, 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனமாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

அமர்வு நீதிமன்றம், ஆவணங்களைப் பெற்று சட்டப்படி விசாரணை நடைமுறைகளைத் துவங்க உத்தரவிட்ட நீதிபதி, வி.கே.டிபாலன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Balasingam chennai high court
இதையும் படியுங்கள்
Subscribe