'ஜாமீனா? அமைச்சர் பதவியா?'-செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு

nn

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டவழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். தொடர்ந்து அமைச்சரவையிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக கடந்த செப்டம்பர் முதல் பதவி வகித்து வருகிறார்.

ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு கடந்த 24-03-25 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், ‘அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா என்பதை தெரிவிக்கும்படி கூறியிருந்தோம். ஆனால், அதை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொள்கிறீர்களா?காலம் தாழ்த்துவது சரியான நடைமுறை அல்ல, இதற்கு மேல் கூடுதல் அவகாசம் வழங்க முடியாது. எனவே, இது குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23/04/2025) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனையை மீறவில்லை. சட்டபூர்வமாக ஜாமீன் கிடைத்ததால் அமைச்சராக பதவியேற்றார் என செந்தில் பாலாஜி தரப்பு பதிலளித்து வாதிட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் 'அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும்' என கேள்வி எழுப்பினர். மேலும் செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு பிரிவு 21 மீறியதால் ஜாமீன் வழங்கினோம்' என்றனர்.

ஜாமீனில் வெளியேஉள்ள செந்தில்பாலாஜி சாட்சிகளைக் கலைப்பார் என்ற ஐயம் இருப்பின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனகோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பின் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதை வரும் திங்கட்கிழமை (28/04/2025) தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் செந்தில்பாலாஜி தரப்பு பதிலளிக்க மீண்டும் கூடுதல் அவகாசம் கேட்டது. அதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

Karur Senthilpalaji Transport
இதையும் படியுங்கள்
Subscribe